திங்கள், 4 ஜூலை, 2011

வேதனையில் வெண்ணிலா

வேதனையில் வெண்ணிலா
யாரும் அதனை கண்டு கொள்வதில்லையாம்,
நீ வந்த பிறகு...

நீ இருப்பதால்

வழியெங்கும்
வேகத் தடைகள் என்
வாழ்க்கை பயணத்தில்
வந்த போதிலும்
சந்தோஷமாய் நான்

உடன் நீ வருவதால்

பிரிவின் சுகம்

உன் பிரிவில் வாடும் போதெல்லாம்

கடந்த காலத்துக்கு கடத்திச் சென்று கலகலப்பூட்டுகிறது

நம் காதல் நாட்கள்

முத்தம்

கொடுத்ததை திரும்ப பெறும் பழக்கம் எனக்கில்லை

ஆனாலும் பெற துடிக்கிறேன் உன்னிடமிருந்து

முழுமனதாய் நீ தரும் முத்தத்தை...

புதன், 29 ஜூன், 2011

தோழி

என் காதலை சொல்லும் வரை
உன்னுடனே இருந்தவள்

விடை பெறும் நேரம் பார்த்து விலகிக் கொள்கிறாள்

உன் வெட்கத்தோழி

முகப்பரு

பல பெண்களைப் பார்த்தது போல்
முளைக்கிறது
முகப்பருக்கள்

ஒருமுறை உனைப் பார்த்ததற்கே

மீண்டும் மழை வரலாம்

என் மேகங்கள்
சோகங்களால் சூழ்ந்திருப்பதால்

மீண்டும் மழை வரலாம்

அவள் கண்மீன்களிலிருந்து...

இசை பயணம்

இதழின்றி
ஒரு இசைக்குயிலின்
இன்னிசை பயணம்

அவளின் கால் கொலுசு

இரக்கப்பட்ட எமன்இரக்கப்பட்ட எமன்

பாசக்கயிறு வீச வந்தவனும்
நேசக்கயிறு நீட்டுகிறான்

உன் நட்பில் ஒருமுறை நனைந்ததற்கே...

பணம்

நமக்காக
முதலாளிகளை
மாற்றிக்கொள்ளும்
கூலிக்காரனாய்

பணம்

கண்கள்

உன் கண்களை நேரடியாக
பார்க்க துணிந்ததால்

பார்வை இழக்கிறது

மின்னல்

பறித்தது யாரோ

பூப்பறிக்க செல்கிறாய்,

நீ பறிக்கும் முன்
பறித்து சென்று விடுகிறது
பூந்தென்றல்

உன் சிரிப்பூக்களை

வானவில் வேலி

வானவில்லை வளைத்து
வேலியிட்டுக் கொள்கிறாய்
உன் அழகை...

வண்ண திரையை விளக்கி காட்டிக் கொடுக்கிறது

நான் வருவதை பார்த்த உன் வானவில்

முழுநிலவு

தேய்பிறையில்
தேய்கின்ற தேனிலவை
ரசித்துக் கொண்டிருக்கிறது
ஒரு பௌர்ணமி நிலவு

மொட்டமாடியில் பவனி வந்து

பூங்காற்றுபூங்காற்று

பல மைல் தூரம் கடந்தும்
பரப்பிக் கொண்டிருக்கிறது
பூங்காற்று

உன் கூந்தல் வாசத்தை

திங்கள், 27 ஜூன், 2011

மழை தோழி

'நல்லவங்க காட்டுல தான் மழை பெய்யும்'
என்கிறேன்
சட்டென்று பெய்கிறாள்
உன் மழை தோழி

உன்னை நல்லவளாக அடையாளம் காட்ட...

குளியல்

நீ குளிக்க வருவதை கண்டு
குதூகலமாகிறது குற்றால அருவிகள்

உன் அழகில் குளிக்க போவதை எண்ணி

நிலவின் நகல்

ஓய்வின்றி உழைக்கும்
வெண்ணிலவுக்கு
ஓய்வு கொடுக்கிறாள்
ஒரு பெண்ணிலவு

தூங்காமல் கண்விழித்து

நிழலும் நிஜமானது

அவள் கண்பட்ட நிலவும் சிலையானது...
அவள் கைப்பட்ட நிழலும்
நிஜமானது...
அவள் இதயம் தொட்ட என் காதலும் கவிதையானது...

தாவணியின் தவம்

கைக்குட்டையும்
கெஞ்சுமே,
உன் உள்ளங்கை உலகத்தில் உறைந்து போக...
தாவணியும் தவம் கிடக்குமே,
உன் மேனியில் படர்ந்து வளர...
என் கவிதைக்கும் கைகள் முளைக்குமே
உன் அழகை தூக்கி சுமப்பதற்கு...

அப்பறம்

வார்த்தைகள்
தடுமாறும் போதும்
தடம் மாறும் போதும்

அடுத்த பேச்சுக்கு
அழகாய்
அஸ்திவாரம் போட்டுவிடும்
அவளின் "அப்பறம்" என்கிற ஆயுதம்

அவள் தந்த வரதட்சணை

நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே
வருகிறது
வரதட்சணை
உன்னிடமிருந்து

அளவில்லா அன்பையும்
களங்கமில்லா காதலையும் சுமந்து கொண்டு...

கவிதை கிறுக்கன்

என் கிறுக்கல்களை
கவிதை என்று சொல்லும் நீ...

என்னை மட்டும்
கிறுக்கன் என்கிறாயே...

எதிர்ப்பார்த்ததால் ஏமாற்றம்

நான் எதிர்பார்த்த குணங்கள் எதுவும்
அவளிடம் இல்லை

ஆனாலும்
காத்துக்கிடக்கிறேன்
அவளை எதிர்ப்பார்த்து...

காதல் மிருகம்

அவள் ஒரக்கண் பார்வைக்கு தான்
ஓராயிரம் அர்த்தங்கள்

புரியவில்லை எனக்கு

காதல் மிருகம்
கண்முழிக்கும் வரை...

கடவுளின் ஆட்டம்

கடவுள் ஆடும்
காதல் விளையாட்டில்

பகடைக் காய்களாய்

நானும் அவளும்

அழுகையில் ஒரு சிரிப்பு

ஒரு கவிதையின் அறிமுகம்

எனக்குண்டா தகுதி ?

கவிதை எழுத அமரும் போதெல்லாம்
எழுத்துக்கள் எழுந்து நின்று கேள்வி கேட்கிறது,

உன்னை வர்ணிக்கும்
தகுதி எனக்கு உண்டா என்று....

சனி, 25 ஜூன், 2011

எகிறி குதிக்கிறாய்
எட்டாக் கனியை
எட்டி பறித்திட...
ஏங்கி போனது கனிகள்

எட்டாமல்
போனதை எண்ணி...

விழி

உன் விழியீர்ப்பு விசையில்
வீழ்ந்தவனை,
மடியில் வைத்து
விசிறி விடுகிறாய்

உன் இமை விசிறிகளால்...

கூந்தல்

வாசமில்லா மலருக்கு
வாசம் தந்து
வாழ்வளிக்கிறது

அவள் கார்மேக கூந்தல்

காதல்

நிஜமென்று முத்தமிடுகிறேன்
அவள் உதட்டு நிழலை...

கனவென்று
கலைக்கிறேன்
தூங்கியும் விழித்த இரவை...

காதல் என்றே
கருதுகிறேன்
மறைமுகமாய் மலர்ந்த அவள் மௌன சிரிப்பை...

காதலியின் கடைசி அழைப்பு

எதிர்பார்த்த நேரங்களில் எல்லாம் அழைக்காதவள்

எதிர்பாராத நேரத்தில்
அழைத்து இருந்தாள்

அவள் திருமணத்திற்கு வர சொல்லி...

மோட்சம்

உன் கையால் உயிர் துறக்கவே,
அவசரமாக பிறவி எடுக்கிறது பூக்கள்...
மோட்சம் கிடைத்துவிடும் நம்பிக்கையில்

கண்கள்

தட்சணை எதுவும்
பெறாமல்
கற்றுக் கொடுக்கிறதே
உன் பட்டாம்பூச்சிக் கண்கள்...
கவிதை எழுதும் கலையை

நினைவுகள்

நித்தமும்
என்னை அழ வைத்து
சிரிக்கிறது
அவளை விட
அவள் நினைவுகள்...